எதையோ நினைத்தபடி
கால்கள் நடந்தன
மெல்லிய தென்றல்
மெதுவாய்த் தழுவி
மௌனமாய் சென்றது
மனசுக்குள் ஓர் விறுவிறுப்பு
எதை பார்த்தாலும்
சோபையிழந்த துடிப்பு
அடி வைக்கும் இடமெல்லாம்
பள்ளமும் திட்டியுமாய்.....
முன்பேதும் அறியாத
முகங்களும்.......
எப்போதும் ஒலிக்காத
மொழிகளும்........
புதிதாய் நிறுவப்பட்ட
கட்டடங்களும்.......
எல்லாமே புதிதான
தோற்றத்தில்.......
உதிக்கின்ற சூரியனின்
உதயத்தில் மகிழ்வில்லை
வீசுகின்ற காற்றில்
வாசம் தெரியவில்லை
பச்சை மரங்கள்
பசுமை இழந்ததாய்......
பட்ட மரங்கள்-அதன்
கதை சொல்வதாய்.....
கரைமோதும் அலையில்
நிறைவேதும் இல்லாததாய்....
விரிகின்ற மலர்கள்
வடிவு இழந்ததாய்......
வாழ்கின்ற விலங்கினம்
வலி சுமந்ததாய்......
பறந்து செல்லும்
பறவைக்கூட்டம்
எதையோ தொலைத்ததாய்.....
கண்கள் கண்டதெல்லாம்
கதையாகிப் போனது
அப்போது.........
புரிந்தது மனசு -அங்கு
விஞ்சியிருக்கும் மனிதர்கள் -இனி
சிரிக்கவே மாட்டார்களா....?
ஏக்கத்தோடு நகர்ந்தது கால்கள்
No comments:
Post a Comment