கண்கள் இரண்டானாலும்
பார்வை என்றும் ஒன்று
கரைகள் இரண்டானாலும்
ஓடும் நதி ஒன்று
சிறகு இரண்டானாலும்
பறப்பு என்பது ஒன்று
குயில்கள் வேறு ஆனாலும்
கூவும் ஓசை ஒன்று
உறவும் பிரிவும் இரண்டானாலும்
தாங்கும் உள்ளம் ஒன்று
உண்மை பொய் இரண்டானாலும்
பேசும் வார்த்தை ஒன்று
இன்பம் துன்பம் இரண்டானாலும்
ஏற்கும் இதயம் ஒன்று
வளர்தல் தேய்தல் இரண்டானாலும்
பிறை என்பது ஒன்று
வெற்றி தோல்வி வேறானாலும்
போட்டி என்பது ஒன்று
ஆறு கேணி வேறானாலும்
நீர் என்பது ஒன்று
கள்ளும் பாலும் வேறானாலும்
வெண்மை என்பது ஒன்று
களவும் பொய்யும் வேறானாலும்
சேரும் பாவம் ஒன்று
இரவும் பகலும் வேறானாலும்
நாள் என்பது ஒன்று
பூவும் காற்றும் வேறானாலும்
மலர்தல் என்பது ஒன்று
தென்றல் புயல் வேறானாலும்
காற்று என்பது ஒன்று
செடிகள் இரண்டு ஆனாலும்
பூவின் மணம் ஒன்று
உள்ளம் இரண்டு என்றாலும்
காதல் என்பது ஒன்று
பக்கம் இரண்டு கொண்டாலும்
இலை என்பது ஒன்று
விழுதுகள் பற்பல என்றாலும்
ஆல் என்பது ஒன்று
எறும்பு யானை என்றாலும்
உள்ளே உயிர் ஒன்று
இழமை முதுமை வேறானாலும்
தழுவும் மரணம் ஒன்று
ஏழை செல்வர் ஆனாலும்
வாழ்வின் முடிவது ஒன்று
ஆண்டி அரசன் என்றாலும்
சேரும் காடு ஒன்று
எல்லாம் இங்கே ஒன்றேயானால்
உனக்குள் பிரிவு ஏனடா?
ஒற்றுமை நீங்குதல் கேடடா
நீதி என்பது ஒன்றென்போம்
நியாயம் என்பது ஒன்றென்போம்
சாதியென்பது ஒன்றென்போம்
சமயம் என்பதும் ஒன்றென்போம்
வெற்றியை மனதினுள் வைத்திடு
தோல்வியை படிகளாய் மாற்றிடு
அத்ர்மத்தை அடியோடு அழித்திடு
தர்மத்தை காத்திட உழைத்திடு
உன் உள்ளக் கோவிலைத்திறந்திடு
அன்பெனும் தெய்வத்தை இருத்திடு
உன்மேல் நம்பிக்கை வைத்திரு
நல்லதை நாளும் நினைத்திடு
நினைத்ததை முடித்திடவிழித்திடு
இயற்கையை என்றும் மதித்திடு
தெய்வமே உனைத்தேடும் காத்திரு
No comments:
Post a Comment